தமிழ்நாடு

வேலூரில் இருந்து சிறப்பு ரயிலில் 1140 பேர் ஜார்க்கண்ட் அனுப்பி வைப்பு

வேலூரில் இருந்து சிறப்பு ரயிலில் 1140 பேர் ஜார்க்கண்ட் அனுப்பி வைப்பு

PT

தமிழ்நாட்டில் இருந்து வெளிமாநிலத்தவர்கள் 1140 பேர் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வேலூரில் பீகார், ஒடிசா, ஜார்கண்ட், மேற்கு வங்கம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள், மற்றும் பிற ஊர்களில் இருந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்தவர்கள் என சுமார் 9000 பேர் ஊரடங்கு காரணமாக விடுதிகளில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு வழங்கப்பட்டு வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இதில் 1200 பேர் வாகன பாஸ் அளிக்கப்பட்டு சொந்த மாநிலத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்

இதனால், பிற நபர்கள் தங்களையும் சொந்த ஊர் அனுப்பக்கோரி கடந்த 2 நாட்களாக ஆட்சியர் அலுவலகம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து வேலூரில் தங்கியுள்ள வெளிமாநிலத்தார் குறித்து கணக்கெடுக்கப்பட்டு அவர்களில் முதற்கட்டமாக ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 1240 பேருக்கு வாகன பாஸ் வழங்கப்பட்டது. காட்பாடி இரயில் நிலையத்தில் அவர்களுக்கென்று ஏற்பாடு செய்யப்பட்ட 24 பெட்டிகளை கொண்ட சிறப்பு இரயிலில் சுமார் 1140 பேர் சமூக இடைவெளியை கடைபிடித்தவாறு இரவு சுமார் 10.50 மணியளவில் அனுப்பிவைக்கப்பட்டனர். இவர்களுக்கு தேவையான உணவு மற்றும் சோப்புகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.