கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மாணவர் கைலாஷ் மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளியில் இருந்து வீடு திரும்பும்போது மாணவன் பேருந்தின் படியில் தொங்கியபடி பயணித்துள்ளார். அப்போது கைலாஷ் தவறி விழுந்ததில் பின் சக்கரத்தில் அடிபட்டு தலை நசுங்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் மாணவனின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் நொறுக்கி போட்டுள்ளது.
இந்த நிலையில் இதுபோன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடந்து விடக்கூடாது என்பதை வலியுறுத்தி, கடலூர் போக்குவரத்து காவல்துறையும் சட்டம் ஒழுங்கு காவல்துறையும் இணைந்து சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மேலும், உயிரிழந்த மாணவர் கைலாஷ்-க்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து படியில் பயணித்தால் என்ன நடக்கும், அவர்கள் குடும்பம் எப்படி கதறும் என்பதை காவல்துறையினர் எடுத்துரைத்தனர்.
இந்த நிகழ்வில் பங்கேற்ற உயிரிழந்த மாணவர் கைலாஷின் தந்தை, மாணவர்களிடம் பேச முடியாமல் மாணவர்களின் காலில் விழுந்து "பாத்து போங்கப்பா... படியில் தொங்காதே" என காலில் விழுந்து கதறி அழுதார். இது அங்கிருந்த மாணவர்கள் மத்தியில் யோசிக்க வைத்தது மட்டுமல்லாமல் அனைவரையும் கண்கலங்கச் செய்தது.