மாம்பழ குடோன் ஆய்வு
மாம்பழ குடோன் ஆய்வு PT Desk
தமிழ்நாடு

தென்காசி: தடை செய்யப்பட்ட அமில ஸ்பிரே அடித்து பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்!

PT WEB

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பிரானூர் பார்டர் பகுதியில் ஏராளமான மாம்பழங்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. உடன் மாம்பழங்களை ஏற்றுமதி செய்யும் குடோன்களும் உள்ளன. இங்கிருந்து டன் கணக்கிலான மாம்பழங்கள் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவுக்கும், தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

மாம்பழ குடோன் ஆய்வு

இந்த நிலையில், பிரானூர் பார்டர் பகுதியில் செயல்பட்டு வரும், மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான மாம்பழக் குடோனில் தடை செய்யப்பட்ட அமிலத்தை பயன்படுத்தி மாம்பழங்களை பழுக்க வைத்துள்ளதாகவும், இதனால் உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் உணவு பாதுகாப்புத்துறைக்கு சமீபத்தில் தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று அங்கு சோதனை செய்தனர். அதிகாரிகள், மாம்பழங்களை தண்ணீரில் போட்டு சோதனை செய்தனர்.

அப்பொழுது, மாம்பழங்கள் அனைத்தும் மிதக்கவே, அவற்றில் அமிலங்கள் அடிக்கப்பட்டிருந்தது உறுதியானது. அதனை தொடர்ந்து ஸ்ப்ரே அடிக்க வைக்கப்பட்டிருந்த பாட்டிலை கைப்பற்றினர்.

spray used for ripening the mangoes

இதையடுத்து சுமார் 500 கிலோ மதிப்பிலான அமிலம் மூலம் பழுக்க வைக்கப்பட்டுள்ள மாம்பழங்களை மொத்தமாக பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி, அவற்றை செங்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டி பினாயில் ஊற்றி அழித்தனர்.

மேலும், இது போன்ற அமிலம் கலந்த ஸ்பிரே அடித்து மாம்பழங்களை பழுக்க வைப்பவர்கள் மீதும், செயற்கை கற்களை பயன்படுத்தி மாம்பழங்களை பழுக்க வைப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மாம்பழ குடோன் ஆய்வு

மாம்பழ குடோன்கள் மற்றும் மாம்பழங்களை விற்பனை செய்யும் கடைகள் நடத்தி வருபவர்கள் கண்டிப்பாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் லைசன்ஸ் பெற்ற பிறகு விற்பனையில் ஈடுபட வேண்டும் எனவும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.