தமிழ்நாடு

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை : குட்கா பொருட்கள் பறிமுதல்

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை : குட்கா பொருட்கள் பறிமுதல்

webteam

திருச்சியில் பல்வேறு இடங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

திருச்சி மாநகரில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் புழங்குவதாக வந்த தகவலின் அடிப்படையில், குடமுருட்டி, மேல சிந்தாமணி, நடுகுஜிலி தெரு, கே.கே.நகர் ஆகிய பகுதிகளில் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி சித்ரா தலைமையில் காலை 4 மணியிலிருந்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் ரூ.44000 மதிப்பிலான 45 கிலோ கலப்பட டீத்தூள், 200 கிலோ அளவிலான பான், குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்களும் பறிமுதல் செய்தனர். இதன் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.2 லட்சம் என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக நடுகுஜிலித்தெருவை சேர்ந்த பிரகாஷ் என்பவரிடம் நடத்திய விசாரணையில் அவரது  இருசக்கர வாகனத்தில் இருந்து 50 கிலோ,  குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 கிலோ பான், குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கே.கே.நகரை சேர்ந்தமுகமது இக்பால் கலப்படம் செய்யப்பட்ட டீத்தூள் பாக்கெட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பொருட்கள் பெங்களூர், கோவை போன்ற இடங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு திருச்சி, துவரங்குறிச்சி, காட்டுப்புத்தூர், புதுக்கோட்டை, வீரப்பூர், திண்டுக்கல் என பல்வேறு இடங்களுக்கும் விநியோகிக்கப்படுகிறது. இந்த கலப்பட டீத்தூளை பயன்படுத்துவதால் கல்லீரல் பாதிப்பு உள்ளிட்ட உடல் உபாதைகள்  ஏற்படும் என உணவு பாதுகாப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் உணவு பாதுகாப்பு அதிகாரி சித்ரா "மாநகர் முழுவதும் தடை செய்யப்பட பொருட்கள் விற்கப்படுகின்றனவா என தினமும் சோதனை நடத்தப்படும். தடை செய்யப்பட பொருட்களை பதுக்கி விற்பது சட்டப்படி குற்றமாகும். பான், குட்கா போன்ற பொருட்களை விநியோகிப்பவர்கள் மீதும், விற்பவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கடைகளில் ஒரு பாக்கெட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலும் அவர்களது உரிமம் ரத்து செய்யப்படும். உரிமம் இல்லாத கடைகள் மூடப்பட்டு சீல் வைக்கப்படும். இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என வியாபாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.