தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு, காரம் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பின்பற்ற வேண்டிய உணவுப் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு, காரம் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பின்பற்ற வேண்டிய உணவுப் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் தெரிவித்துள்ளார். இதன்படி உணவுத் தயாரிப்புக்குத் தரமான எண்ணெய், நெய் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். பால் பொருட்களில் தயாரித்த இனிப்புகளையும், பால் அல்லாத பொருட்களில் தயாரித்த இனிப்புகளையும் தனித்தனியே பொட்டலமிட வேண்டும். உணவுப் பொருட்களை மூடிய நிலையில் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களைக் கையாள்பவர்கள் அனைவரும் மருத்துவ தகுதிச் சான்று பெற்றிருக்க வேண்டும். உணவுகளைக் கையாள்பவர்கள் வெற்றிலை, புகையிலை மெல்லுதல், புகைபிடித்தல், எச்சில் உமிழ்தல் போன்ற செயல்பாடுகளை உணவு தயாரிக்கும் வளாகத்தில் மேற்கொள்ள அனுமதிக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பணியாளர்கள் அனைவரும் தலையுறை, கையுறை மற்றும் மேலங்கி அணிந்திருக்க வேண்டும். பேக்கிங் செய்யப்படும் உணவுப்பொட்டலங்களில் உணவு பாதுகாப்பு லேபிள் விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். GIFT BOX-களில் பேக்கிங் செய்யப்படும். இனிப்பு, காரம், உலர் பழங்கள்,கொட்டைகள் போன்றவற்றிலும் கண்டிப்பாக லேபிள் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களை பிறவணிகர்களுக்கு விற்பனை செய்யும்முன் அவர்கள் உணவு பாதுகாப்புஉரிமம்/பதிவு சான்றிதழ் பெற்றுள்ளதை உறுதி செய்துகொள்ள வேண்டும். உணவுப் பாதுகாப்பு சட்டவிதிமீறல் இருந்தால் 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும், TNFSDConsumer App என்ற செயலியிலும் புகார் தெரிவிக்கலாம் என உணவுபாதுகாப்புத் துறை நியமன அலுவலர் தெரிவித்துள்ளார்.