அதிமுக ஆட்சியில் வெற்றிடம் என்பதற்கு இடமில்லை என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியிருக்கிறார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு அவைகளுக்கு நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியானது தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 994 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகைகள் வழங்கப்பட்டது.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், “கஜா புயல் பாதிப்பில் பிரதான மாவட்டமாக திருவாரூர் மாவட்டம் உள்ளது. கஜா பாதிப்பானது பெரும் பாதிப்பு. கஜா புயல் சீற்றம் ஏற்பட்டு நாளையோடு ஒரு வருடம் ஆக உள்ள நிலையில் சில கிராமங்களுக்கு பயிர் காப்பீடு இதுவரை வழங்கப்படவில்லை என்பது உண்மைதான். மத்திய அரசின் காப்பீடு தொகை நிறுவனம் பாதிக்கப்படாத இடம் என கணக்கீடு செய்துவிட்டது. அவை படிப்படியாக சரி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்க்ளுக்கு காப்பீடு தொகை வழங்கப்படும்.
அதிமுக அரசு செம்மையாக சென்று கொண்டு இருக்கும் தமிழகத்தில் வெற்றிடம் என்பதே இல்லை, ரஜினி எங்கு இருக்கிறார் வெற்றிடத்தை நிரப்புவதற்கு? தேவையில்லாமல் சிலர் வெற்றிடம் உள்ளது என கூறிக்கொண்டு இருக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.