தமிழ்நாடு

'விரல்ரேகை தெளிவின்றி இருந்தாலும் ரேசன்பொருள் தருக' - உணவுத்துறை உத்தரவு

Sinekadhara

பயோமெட்ரிக் முறையில் விரல் ரேகை தெளிவாக விழாவிட்டாலும் ஆவணங்களை சரிபார்த்து ரேசன் பொருட்களை வழங்க வேண்டும் என உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

ரேசன் அட்டைதாரர்கள், உணவுப் பொருட்களை பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இதர அட்டைதாரர்கள் ரேசன் கடைகளுக்குச் வரும்போது, கனிவுடன் ரேசன் அட்டையை ஸ்கேன் செய்து, விரல் ரேகை சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரல் ரேகை சரியாக உள்ள அட்டைதாரர்களுக்கு உடனடியாக பொருட்கள் வழங்கவேண்டும் எனவும், தெளிவின்மையால் விரல்ரேகை, பயோமெட்ரிக்கில் விழாமல் போனாலும், ரேசன் பொருட்களை விநியோகிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பதில் அங்கீகரிக்கப்பட்ட நபர் பொருட்கள் பெற வந்தால், உடனடியாக பொருட்களை விநியோகம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக்கோளாறு காரணமாக அரைமணி நேரத்திற்கு மேல் ஆதார் இணைப்பு பெறமுடியாத சூழலில், பிற வழிமுறைகளை கடைப்பிடித்துப் பொருட்களை விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரேசன் கடைகளில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு பாதுகாப்பை, உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவருக்கு, உணவுத்துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.