சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க... பூண்டி ஏரி நீரால் மூழ்கிய தரைப்பாலம்... ஆபத்தை உணராமல் பயணிக்கும் மக்கள்
இதன்மூலம் 35 அடிகொண்ட பூண்டி ஏரியின் நீர்மட்டம் தற்போது 33.95 அடியாக உயர்ந்துள்ளது. ஆந்திராவில் பெய்து வரும் கன மழை காரணமாக பூண்டி ஏரிக்கு 1,691 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து பாதுகாப்பு கருதி ஏரியிலிருந்து ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கொற்றலை ஆற்றுப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொற்றலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிலர் ஆபத்தை உணராமல் தரைப்பாலம் வழியாக ஆற்றை கடந்து செல்கின்றனர். மேலும் சிலர் தண்ணீரில் நீச்சல் அடித்து வருகின்றனர். அசம்பாவித சம்பவங்கள் நிகழும் முன், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கொற்றலை மட்டுமன்றி, ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் திருத்தணி பகுதியிலுள்ள ஐந்து தரைப்பாலங்களை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்வது குறிப்பிடத்தக்கது.