தமிழ்நாடு

இரவானால் பனிப்பொழிவு.. பகலானால் கடும் வெயில்... - அவதிக்குள்ளாகும் சென்னைவாசிகள்!

webteam

சென்னையில் பகலில் கடும்வெயிலும், அதிகாலையில் பனிப்பொழிவும் ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இன்று காலை பனிப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர். மார்ச் மாதம் வந்துவிட்ட போதிலும் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் தொடர்ந்தே வருகிறது. கடந்த ஒருவாரம் பனிப்பொழிவு குறைந்து இருந்த நிலையில், இன்று அதிகாலை நேரத்தில் இருந்து 7 மணி வரை பனிமூட்டம் அதிகமாகவே இருந்தது. பனிப்பொழிவு காரணமாக நடைப்பயிற்சி, சைக்கிளிங் மேற்கொள்பவர்கள் சிரமத்தை எதிர்கொண்டனர். வாகன ஓட்டிகளும் மெதுவான வேகத்திலேயே வாகனங்களை ஓட்டினர்.
முக்கிய சாலைகளிலும் கூட பனி மூட்டம் இருப்பதால், வாகன ஓட்டிகள் வாகனத்தை ஓட்டிச்செல்வதில் கூட சிரமத்தை எதிர்கொண்டு முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடியே வாகனத்தை ஓட்டிச் சென்றனர். பனிமூட்டம் விலகிய பின்பு சென்னையில் உடனடியாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குளிர்காலம் முடிந்து இன்னும் சில தினங்கள் கூட முடியவில்லை. நாளை தான் பங்குனி மாதம் பிறக்கிறது. இந்நிலையில் அதற்குள்ளாக பங்குனி மாத வெயிலைப் போல பட்டையைக் கிளப்புகிறது. இரவில் புழுக்கம் தாங்க முடியவில்லை. அதிகாலையில் பனி பொழிவு, பகலில் வெயில் என சீதோசனநிலை மாறியுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.