தமிழ்நாடு

கண்மாய் நீரில் பொங்கியெழும் நுரை: அமைதி காக்கும் அதிகாரிகள் - அச்சத்தில் மதுரை மக்கள்

webteam

மதுரை அவனியாபுரம் கண்மாயில் மலை போல் நுரை பொங்கி காணப்படுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டம், அவனியாபுரம் அருகிலுள்ள அயன் பாப்பாகுடி கண்மாய் நிரம்பி வெள்ளக்கல் அருகிலுள்ள மடையில் மறுகால் பாய்ந்து தண்ணீர் செல்கின்றது. சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாயில் கழிவுநீர் கலப்பதன் காரணமாக கண்மாயில் இருந்து வெளியேறும் நீரிலிருந்து அதிகளவில் நுரை வெளியேறி வருகிறது.

மதுரை மாநகரின் கழிவுநீரை குழாய்கள் மூலம் அவனியாபுரம் அருகிலுள்ள வெள்ளக்கல் பகுதிக்கு கொண்டு வந்து சுத்திகரிப்பு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது பெய்து வரும் கன மழையால் வெள்ளக்கல் குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மழை நீரோடு பாசனக் கால்வாயில் கலந்து பஞ்சு போன்ற வெண்மை நிறத்தில் நுரை நுரையாக கண்மாயில் கலக்கிறது.

தற்போது, கண்மாயில் இருந்து விவசாயத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீரில் வெண்ணிற நுரை கிளம்பி வருவதாக விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், வாய்க்கால் நீருடன் கலந்து வெண்ணிற நுரை கிளம்பி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மதுரை மாநகராட்சியில் முறையாக அந்த கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் குறிப்பிட்ட அளவு கழிவுநீர் கண்மாயில் கலப்பதாகவும், இதனால் அவனியாபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் மிகவும் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றஞாசாட்டினர்.

இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித் சிங் காலோனிடம் கேட்ட போது... மாநகராட்சி அதிகாரிகளை அனுப்பி சோதனை செய்வதாகவும், கழிவுநீர் கலக்க வாய்ப்பில்லை எனவும், உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.