Nirmala Sitharaman
Nirmala Sitharaman Facebook
தமிழ்நாடு

“தமிழ்நாட்டின் தடை பாதிக்காத வகையில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு GST” - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

PT WEB

ஜிஎஸ்டி கவுன்சிலின் 50-வது கூட்டத்தில் ‘ஆன்லைன் சூதாட்டங்கள் மீது 28% ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும் ’என முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என டெல்லி அரசு கோரிக்கை வைத்தது. அத்துடன் கோவா மற்றும் சிக்கிம் மாநிலங்கள் சூதாட்டம் நடைபெறும் கேசினோ அமைப்புகள் மீதான வரி விதிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தன.

இந்த கோரிக்கைகள் 51-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பரிசீலனை செய்யப்பட்டன. இந்தக் கூட்டம் ஆன்லைன் முறையில் நடைபெற்றதாக நிர்மலா சீதாராமன் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு அரசு ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்கள் மீது விதித்துள்ள தடையை வரிவிதிப்பு நீர்த்துப்போக செய்யக்கூடாது என்ற கோரிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு கடிதம் அனுப்பியிருந்தது” என தெரிவித்தார்.

Nirmala Sitharaman

மேலும் “ஆன்லைன் ரம்மி சூதாட்டங்களில் பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு இத்தகைய சூதாட்டங்களை தடை செய்துள்ளது. சூதாட்டங்களை நடத்தும் நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரி செலுத்துவதை சுட்டிக்காட்டி தங்கள் நடவடிக்கைகளை நியாயப்படுத்த கூடாது என தமிழ்நாடு அரசு கருதுகிறது. ஆகவேதான் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு தனது நிலைப்பாடு குறித்து தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அத்துடன் முந்தைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலும் தமிழ்நாடு அரசு தனது கருத்தை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் தடையை பாதிக்காத வகையில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்கள் மீது 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை மனதில் கொண்டு அதற்கேற்ற வகையில் ஜிஎஸ்டி கவுன்சில் நடவடிக்கை எடுத்து வரி விதிப்பு தொடர்பான அறிவிப்புகளை வெளியிடும்.

சூதாட்டங்கள், குதிரை பந்தயம், ஆன்லைன் கேமிங் ஆகியவற்றிற்கு வரிவிதிப்பு குறித்து தெளிவுபடுத்துவதற்காக சி.ஜி.எஸ்.டி சட்டம், 2017-ன் அட்டவணை 3-ல் திருத்தம்; சி.ஜி.எஸ்.டி சட்டம் 2017, ஐ.ஜி.எஸ்.டி சட்டம் 2017 ஆகியவற்றில் சில திருத்தங்களை ஜிஎஸ்டி கவுன்சில் தனது 51வது கூட்டத்தில் பரிந்துரைத்தது.

Nirmala Sitharaman

ஐ.ஜி.எஸ்.டி சட்டம், 2017-ல் ஒரு குறிப்பிட்ட விதியை சேர்க்கவும் கவுன்சில் பரிந்துரைத்தது. இது இந்தியாவுக்கு வெளியே உள்ள ஒரு நிறுவனம் இந்தியாவில் உள்ள ஒரு நபருக்கு ஆன்லைன் சூதாட்ட கேமிங்கை வழங்குவதில் ஜிஎஸ்டி செலுத்துவதற்கு வழிவகுக்கும். மேலும் பதிவு செய்தல் மற்றும் வரி செலுத்துதல் விதிகளுக்கு நிறுவனம் இணங்கத் தவறினால், அத்தகைய நிறுவனத்தால் ஆன்லைன் சூதாட்ட கேமிங்கை வழங்குவதற்காகப் பயன்படுத்தப்படும் எந்தவொரு கணினிப் பொறியியலாலும் அனுப்பப்பட்ட, பெறப்பட்ட அல்லது பரிமாறப்பட்ட டிஜிட்டல் சொத்துக்களை முடக்குவதற்கும் பரிந்துரை செய்துள்ளது. ஆகவே இந்திய வாடிக்கையாளர்கள் ஆன்லைன் சூதாட்டத்திற்கு செலுத்தும் பணத்துக்கு வெளிநாட்டு நிறுவனங்களும் ஜிஎஸ்டி வரி கட்டுவது உறுதி செய்யப்படும்.

சட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கான நடைமுறையை விரைவாக முடித்து, 2023 அக்டோபர் 1 முதல் திருத்தங்களை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்தது” என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதற்கான சட்ட திருத்த மசோதாக்களை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டார்.

- கணபதி சுப்ரமணியம்