தமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை..

கிருஷ்ணகிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை..

webteam

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சுற்றுவட்டார கிராமங்களுக்கு 12ஆவது ‌நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது‌.

தொடர்மழை காரணமாக, கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் தென்‌பெண்ணை ஆற்றில் 2 ஆயிரத்து 328 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில், தற்போது 42.97 அடி தண்ணீர் உள்ளது. எனவே அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதையடுத்து ஆற்றின் கரையோரத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தரைப் பாலங்களைக் கடக்க வேண்டாம் என வருவாய்த்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வாடமங்கலம் கிராமத்தில் மழை நீர் புகுந்ததால் இரண்டு வீடுகள் இடிந்து விழுந்தன. கனமழை காரணமாக வாடமங்கலத்தில் மழை நீர் வெளியேற வழியில்லாமல் கிராமம் முழுவதும் தண்ணீரில் மிதக்கிறது. குறிப்பாக ஜடையன்கொட்டா‌ய் என்ற பகுதியில்15க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதியடைந்துள்ளனர். இதையடுத்து தண்ணீரில் தத்தளிக்கும் கிராமத்தை பார்வையிட்ட வட்டாட்சியர்,  நீரை வெளியேற்ற உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.