திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால் வீடுகளுக்குள் மழைநீரும், கழிவுநீரும் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வேலம்பட்டி, வடுகபாளையம்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் நீர்நிலைகளின் கரை உடைந்ததால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றால் வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன. ஆங்காங்கே சாலையில் மரங்கள் விழுந்துள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் கால்வாய்களில் மழைநீர் நிரம்பி, குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதால் நோய் தொற்று ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்த பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அதேபோல், கோவை மாவட்டம் சூலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரத்தில் கன மழை பெய்து வருகிறது. தொடர் மழையால், தாழ்வான பகுதியான அப்பநாயக்கன்பட்டியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இரவு முழுவதும் தண்ணீரில் தத்தளித்த மக்கள், தங்களுக்கு உதவி செய்ய அதிகாரிகள் யாரும் வரவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளனர்.