கனமழையால் குற்றால அருவிகளில் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தென்காசி, செங்கோட்டை, குற்றாலம் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து அபாய வளையத்தை தாண்டி கொட்டுகிறது.
மெயின் அருவியிலிருந்து வெளியேறும் தண்ணீர் குற்றாலம் கடைவீதி பகுதியில் புகுந்துள்ளதால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கொண்டு தண்ணீர் ஊருக்குள் புகாமல் இருக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றால அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், இரவு நேரத்திலும் அருவிகளில் தண்ணீர் கொட்டுவதால் அருவிக்கு அருகில் யாரும் செல்ல முடியாதபடி தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.