தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கும் நிலையில், நெல்லையில் டிஜிட்டல் முறையில் 24மணி நேரமும் ஆற்றில் செல்லும் தண்ணீரின் அளவு கண்காணிக்கப்படுகிறது.
கடந்த 2023ஆம் ஆண்டு தாமிரபரணி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பெருமளவு சேதம் ஏற்பட்டது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நெல்லை மாநகராட்சி நிர்வாகம் சார்ர்பில், மாநகருக்குள் வெள்ளநீர் வருவதை கண்காணிக்கும் வகையில்தாமிர பரணி ஆற்றில் 10 இடங்களில் அதிநவீன கேமராக்கள் மற்றும் அளவீட்டு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இவற்றின் மூலம், ஆற்றில் எவ்வளவு தண்ணீர் வருகிறது என கணக்கிட்டு, உடனடியாக மாநகராட்சி பகுதியில் இருக்கும் பொதுமக்களை அப்புறப்படுத்த முடியும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மணல் திட்டில் சிக்கிய 2 இளைஞர்கள் மீட்கப்பட்டனர்.
ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் மீன்பிடித்த 2 இளைஞர்கள் எதிர்பாராதவிதமாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். எனினும் அணைக்கட்டு மற்றும் புதுப்பாலம் இடையே இருந்த மணல்திட்டில் ஏறி இருவரும் தப்பினர். மணல்திட்டை சுற்றி வெள்ளம் சென்றதால் கரைக்கு வர முடியாமல் 2 இளைஞர்களும் தவித்தனர்.
தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர் ஒருவர் பாலத்தில் இருந்து கயிறு கட்டிஆற்றில் இறங்கி ஒவ்வொருவராக மீட்டுமேலே கொண்டு வந்தனர்.