காஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், 6 கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே 2015ம் ஆண்டிற்குப் பிறகு மீண்டும் தற்போது செய்யாற்றில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் அருகே இருக்கும் இளையனார் வேலூர், வல்லிமேடு, வயலூர், சிறுதாவூர் உள்ளிட்ட 6 கிராம மக்கள், அன்றாட பணிகளை மேற்கொள்ள ஆற்றைக் கடந்தே செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. ஆனால், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அப்பகுதி மக்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.
குறிப்பாக 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளிக்குச் செல்ல வேண்டுமென்றால் 35 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டியுள்ளதாகவும், ஆனால் அதற்கு போதிய பேருந்து வசதி இல்லை என்றும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காண இளையனார் வேலூர் பகுதியையும், மெய்வாடிபாக்கத்தையும் இணைக்கும் வகையில் செய்யாற்றில் ஒரு தரைப்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.