தேனி மாவட்டம் வைகை ஆற்றில் 4 ஆண்டுகளுக்கு பின் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல் பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து அதிகளவில் நீர் திறக்கப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று நேற்று புயலாக மாறியது. குமரி கடல்பகுதியில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தூரத்தில் இது மையம் கொண்டிருந்ததால் குமரி, நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. புயல் தற்போது கன்னியாகுமரியை விட்டு விலகி திருவனந்தபுரத்தின் மேற்கு திசையில் 230 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.
புயல் காரணமாக தென் தமிழகம் முழுவதும் நேற்று மழை வெளுத்து வாங்கியது. இன்றும் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக பல அணைகளின் நீர்மட்டும் அதிகரித்துள்ளன. தேனி மாவட்டம் வைகை ஆற்றில் 4 ஆண்டுகளுக்கு பின் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து அதிகளவில் நீர் திறக்கப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே தாமிரபரணி கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கொடுமுடி அணையும் நிரம்பி உள்ளது. எனவே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு நாங்குநேரி தாசில்தார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.