மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை நிரம்பி, பவானி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்படுவதால் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த ஒருவாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பில்லூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் 100 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 99 அடியை தாண்டியது. இதனால் அணைக்கு வரும் 20 ஆயிரம் கனஅடி நீர் முழுவதும் திறக்கப்படுவதால் பவானி ஆற்றில் நீரின் வேகம் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனை ஒட்டி கோவை மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. பவானி கரையோரப் பகுதிகளான மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகையில் தாழ்வான இடங்களில் வசிப்போர் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறு தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.