தமிழ்நாடு

தூர்வாரப்படாத கால்வாய்.. கண்டுகொள்ளாத அதிகாரிகள் - ஊருக்குள் புகுந்த தண்ணீர்

webteam

நெல்லையில் கால்வாய் தூர்வாரப்படாததால் ஊருக்குள் தண்ணீர் புகுந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட தச்ச நல்லூரை அடுத்த கரையிருப்பு கிராமத்தில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்து மக்கள் மிகுந்த சிரமத்துள்ளாகினர்.

தெருக்களில் நடமாட முடியாமல் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அவதிப்பட்டனர். ஊருக்குள் தண்ணீர் புகுவதற்கு கால்வாயை சுத்தம் செய்யாததே காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

அப்பகுதியில் உள்ள கன்னடியன் கால்வாய் மூலம் அப்பகுதியைச் சுற்றி விவசாயம் நடைபெறுகிறது. கால்வாய் சரியாக தூர்வாரப்படவில்லை என்றும் தாவரங்கள் அதிகளவில் வளர்ந்து இருப்பதால் தண்ணீர் அடைப்பு ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த அடைப்பு காரணமாகவே ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளதாகவும், இது குறித்து அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கரையிருப்பு கிராம மக்கள் நெல்லை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்படி கால்வாய் சுத்தம் செய்யப்பட்டு தண்ணீர் அடைப்பு சரிசெய்யப்பட்டு வரப்படுகிறது.