மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் நாளை நடக்கவுள்ளது. 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், லட்சக்கணக்கான தொண்டர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல விஜய் நடந்து சொல்லும் ராம்ப்வாக் மேடை, பொதுமக்கள் அமரும் பகுதிகள், கழிப்பிட வசதிகள், மருத்துவ வசதிகள், வாகனத்திற்கான பார்க்கிங் ஏற்பாடுகள் போன்றவை முழு வீச்சில் நடந்து வருகின்றன. இம்மாநாட்டுக்கு தற்போதிலிருந்தே தமிழ்நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான தவெக தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் என பலரும் வரத் தொடங்கியிருக்கின்றனர்.
இந்நிலையில் மாநாட்டுத் திடலில் நடப்பட இருந்த சுமார் 100 அடி கொடிக்கம்பம் கீழே விழுந்திருக்கிறது. நாளை மாநாட்டின் தொடக்கமாக விஜய் கொடி ஏற்ற இருந்த கம்பம் திடீரென கீழே விழுந்தது. கிரேன் மூலம் கொடிக்கம்பத்தை நிறுவ முற்பட்டபோது கார் மீது விழுந்தது. கிரேனிலிருந்த கயிறு கழன்றதே கொடிக்கம்பம் கீழே விழுந்ததற்கு காரணமாக கூறப்படுகிறது. நல்வாய்ப்பாக காருக்குள் யாரும் இல்லாததால் கொடிக்கம்பம் சாய்ந்த விபத்தில் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை.