திருச்சி அருகே 5 வயது குழந்தை மரணம் தொடர்பாக குழந்தையின் தாய் மற்றும் அவரின் இரண்டாவது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் நித்திய கமலா. இவர் தனது கணவர் முத்துப் பாண்டியன் மற்றும் ஐந்து வயது மகள் லத்திகா ஸ்ரீயுடன் வசித்து வருகிறார். இதனிடையே சிறுமி லத்திகா ஸ்ரீயை நேற்று தாய் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. படிக்காமல் சிறுமி டிவி பார்த்ததால், லத்திகா ஸ்ரீயை தாய் நித்திய கமலா அடித்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் சிறுமியின் மரணம் தொடர்பாக தாய் மற்றும் அவரின் இரண்டாவது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். நித்திய கமலத்திற்கும் தேனி மாவட்டம் போடி பகுதியை சேர்ந்த பிரசன்னா என்பவருக்கும் திருமணமாகி லத்திகா ஸ்ரீ என்ற மகள் பிறந்தது தெரியவந்துள்ளது. ஆனால் நித்திய கமலத்திற்கும் பிரசன்னாவிற்கும் ஏற்பட்ட கருத்து மோதலால் இருவரும் விவாகரத்து பெற்றுள்ளனர். இதனையடுத்து முத்துப் பாண்டியன் என்பவருடன் நித்திய கமலத்திற்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றுள்ளது. குழந்தை லத்திகா ஸ்ரீ, இவர்களுடனே வசித்து வந்துள்ளார். இந்நிலையில்தான் லத்திகா ஸ்ரீ உயிரிழந்துள்ளார்.
இதனால் போலீசாருக்கு அதிகப்படியான சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் இருவரையும் கைது செய்துள்ளனர். சிறுமி மீது தாயின் இரண்டாவது கணவருக்கு ஏதேனும் கோபம் இருந்து அதனால் கொலை நடந்ததா..? இல்லையென்றால் தெரியாமல் அடித்தது விபரீதமாகி விட்டதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.