தமிழ்நாடு

பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து 5 பேர் பலி

பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து 5 பேர் பலி

webteam

கோவையை அடுத்த சோமனூரில் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்துள்ளனர்.

கோவையிலிருந்து அவினாசி செல்லும் சாலையில் சோமனூர் பேருந்து நிலையம் உள்ளது. திருப்பூர் கோவையை இணைக்கும் வகையில் உள்ள இந்த பேருந்து நிலையத்தில், இன்று மதியம் திடீரென மேற்கூரை சுவர் இடிந்து விழுந்தது. அதில், பேருந்துக்காக காத்திருந்த பயணிகள், மாணவியர் மற்றும் பேருந்து நடத்துநர்கள் என பலர் சிக்கிக் கொண்டனர். தகவலரிந்த தீயணைப்புத்துறையினர் 4 வாகனங்களில் அங்கு சென்றனர். 6 ஆம்புலன்ஸ்கள், 6 பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. இடிபாடுகளை அகற்றிய தீயணைப்புத்துறையினர் மற்றும் பொதுமக்கள், இடிபாடுகளில் இருந்து 5 சடலங்களை மீட்டனர். அவர்களில் ஒருவர் அரசுப் பேருந்து நடத்துனர், பெண் உள்பட இருவரின் அடையாளங்கள் தெரியவில்லை. மேலும், காயமடைந்த 15 பேரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்த பலரது, கை, கால்கள் இடிபாடுகளில் சிக்கி பலத்த சேதமடைந்துளளன. இந்த கோர விபத்தில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடுமென அஞ்சப்படுகிறது.

விபத்து குறித்து அறிந்த கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி, கோட்டாட்சியர் மதுராந்தகி உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணிகளைப் பார்வையிட்டனர். கடந்த ஒரு வாரகாலமாக கோவையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், பேருந்து நிலையத்தின் மேற்கூரை சேதமடைந்திருப்பதே விபத்துக்குக் காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.