கோவையில் மதம் மாற எதிர்ப்பு தெரிவித்த மாப்பிள்ளையின் தந்தையை கொலை செய்ய வாட்ஸ் ஆப்பில் திட்டம் தீட்டிய புகாரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த குமரேசன் என்பவரது மகன் அருண்குமார் (28). ஹைதராபாத்தில் உள்ள தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கொரோனா காரணமாக கடந்த 7 மாதங்களாக சொந்த ஊரிலிருந்து பணியாற்றி வருகிறார். இவர் ஹைதராபாத்தில் பணியாற்றிய போது, அங்கு தங்கியிருந்த திருவாரூரை சேர்ந்த சஹானா என்பவரை காதலித்து வந்தார். பின்னர், அருண்குமார் வீட்டாரின் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது அவர்கள் கோவையில் வசித்து வருகின்றனர்.
திருமணத்திற்கு பிறகு இஸ்லாமியரான சஹானா, இந்து மதத்திற்கு மாறிவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சஹானாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அருண்குமாரை இஸ்லாமிய மதத்திற்கு மாறும்படி வலியுறுத்தி வந்துள்ளனர். இதற்கு அருண்குமாரின் தந்தை குமரேசன் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சஹானாவின் உறவினர்கள் வைத்துள்ள வாட்ஸ் ஆப் குழுவில் இதுதொடர்பாக விவாதித்து வந்துள்ளனர். அப்போது அவரது உறவினர்கள், குமரேசனை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்ய திட்டம் தீட்டியதோடு, இதற்காக கொல்கத்தாவை சேர்ந்த ஒரு நபரிடம் துப்பாக்கி வாங்க தொலைபேசியிலும் பேசியுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த தேசிய புலனாய்வு முகமை, இதுதொடர்பாக கோவை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, விசாரணை நடத்திய கோவை காவல்துறையினர், ஈரோடை சேர்ந்த முகமது அலி ஜின்னா, திருச்சியை சேர்ந்த இம்ரான்கான், சதாம் உசேன், சென்னையை சேர்ந்த பக்ருதீன் மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராம்வீர் அஜய் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
அவர்கள் மீது கூட்டு சதி, இரு பிரிவினரிடையே விரோத உணர்ச்சியை தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சஹானாவின் தாய் நூர்நிஷா, திருவாரூர் மாவட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மகளிரணி நிர்வாகியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.