Boat
Boat pt desk
தமிழ்நாடு

தொடங்கியது மீன்பிடி தடைக்காலம்.. நிவாரணத்தை உயர்த்தி வழங்குமாறு தமிழ்நாடு மீனவர்கள் கோரிக்கை!

webteam

மீன்களின் இனப் பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் தமிழகம் உள்ளிட்ட கிழக்கு கடலோர மாநில மீனவர்கள் 61 நாட்கள் கடலில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு வருகிறது. அரசு அறிவித்த மீன்பிடி தடைக்காலம் இன்று ஏப்ரல் 15ம் தேதி அதிகாலை முதல் அமலுக்கு வருகிறது.

இதையடுத்து நாகை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், செருதூர், கோடியக்கரை, நம்பியார் நகர், நாகூர், புஷ்பவனம், ஆற்காட்டுதுறை, வேதாரணியம் உள்ளிட்ட 27 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்களின் தங்களது விசைப்படகுகள் அனைத்தையும் ஆங்காங்கே உள்ள துறைமுகங்களில் கட்டி பாதுகாப்பாக நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், 61 நாட்கள் வரை மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாததால், படகிலுள்ள வலைகள் மற்றும், மீன்பிடி உபகரணங்களை பத்தரப்படுத்தி பாதுகாக்கும் பணியிலும் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மீன்பிடி தடைக் காலத்தில் விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்லாத நிலையில், மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்த சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருமானம் இன்றி வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கவலை தெரிவித்துள்ளனர். மீன்பிடி தடைக் காலங்களில் அரசு மீனவ குடும்பத்திற்கு வழங்கும் தடைக்கால நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

அதேபோல், விசைப் படகுகளை பழுது நீக்கம் செய்ய மீன்துறையில் உரிமம் பெற்ற பெரிய விசைப் படகுகளுக்கு ரூ.5 லட்சமும், சிறிய விசைப் படகுகளுக்கு ரூ.3 லட்சமும் மானியத்துடன் கூடிய கடனாக வழங்க வேண்டும். இதனால் நாகப்பட்டினம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களின் குடும்பங்கள் அதிக அளவில் பயன் பெறுவார்கள் என தெரிவித்தனர்.