தமிழ்நாடு

தொடங்கியது மீன்பிடி தடைக்காலம்

தொடங்கியது மீன்பிடி தடைக்காலம்

Rasus

தமிழகத்தில் 45 நாட்களுக்கான மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. 13 கடலோர மாவட்டங்களிலும் விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நங்கூரமிட்டு கரையோரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

ராமநாதபுரம், புதுக்கோட்டை தூத்துகுடி, நாகை, சென்னை உள்ளிட்ட 13 மீன்பிடி மாவட்டங்களிலும் சுமார் 5 ஆயிரத்து ‌600 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. தடைக்காலத்தை 60 நாட்களாக உயர்த்துவது குறித்த திட்டம் பரிசீலிக்கப்பட்டுவரும் நிலையில், மீன்பிடி தடை கால நிவாரணத்தை தடை காலத்திலேயே அளிக்க வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதனிடையே, இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைளால் தடைக்காலத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே முற்றிலும் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளதாகக் கூறும் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள், மீனவர் பிரச்னைக்கு இந்த தடைக்காலத்திலேயே தீர்வு காணவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

மீன்வளத்தை பாதிக்கும் இரட்டை மடி வலையை தடை செய்ய வேண்டும் என்றும், இந்த வலையை பயன்படுத்துவதில் உள்ள ஆபத்துகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதும் மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது.