செங்கல்பட்டு அருகே மீனவ பெண்னை பேருந்திலிருந்து நடத்துநர் இறக்கிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கொக்கிலிமேடு கிராமத்தைச் சேர்ந்த செல்லம்மாள் (வயது 52) என்பவர் இன்று காலை மீன் வியாபாரத்திற்காக ரூபாய் 10 ஆயிரத்திற்கு மீனை ஏலம் எடுத்து அதனை மீன் கூடையில் வைத்து மகாபலிபுரம் பேருந்து நிலையத்தில் மகாபலிபுரத்தில் இருந்து தாம்பரம் வரை செல்லக்கூடிய (தடம் எண் 515 பேருந்து எண் TN-01-AN -1842) பேருந்தில் ஏறியுள்ளார். அப்பொழுது அப்பேருந்தின் நடத்துனர் மீன் கூடையை எடுத்துக்கொண்டு பேருந்தில் ஏறக்கூடாது என்று கூறி அப்பெண்மணியை வலுக்கட்டாயமாக பேருந்தில் இருந்து இறக்கி விட்டுள்ளார்.
இந்த பேருந்தில் இந்த நடத்துனர் பணியில் மட்டுமே பேருந்தில் ஏற்ற மறுப்பதாகவும் அவதூறாக பேசுவதாகவும் அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார். நடத்துனர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து தாம்பரம் மாநகர பேருந்து பணினை மேலாளர் பால சுந்தரம் அவரிடம் கேட்டதற்கு, 'நான் விடுப்பில் இருக்கிறேன். பேருந்தில் லக்கேஜ் ஏற்றலாம். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும்' என்று தெரிவித்துள்ளார்.