விசைப்படகு மீது கப்பல் மோதிய விபத்தில் காணாமல் போன மீனவர்களை மீட்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் ராமன் துறையில் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ராமன் துறை உள்ளிட்ட 3 கிராமங்களை சேர்ந்த 11 மீனவர்கள், கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு மீனவர், வட மாநிலத்தை சேர்ந்த 2 மீனவர்கள் என மொத்தமாக 14 மீனவர்கள் கடந்த 4 நாட்களுக்கு முன் கொச்சி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருக்கின்றனர். அப்போது கொச்சி துறைமுகத்திலிருந்து 25 கி.மீ தொலைவில் மீனவர்கள் சென்ற படகு மீது கப்பல் மோதி விபத்திற்குள்ளானது. இதில் 3 மீனவர்கள் உயிரிழந்த நிலையில் அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. ஆனால் 9 மீனவர்களின் நிலைமை என்ன ஆனது என்று தெரியவில்லை. அவர்களில் 7 மீனவர்கள் ராமன் துறை கிராமத்தைச் சேர்ந்தவர். 4 நாட்களாக மீனவர்களை தேடும்பணி நடைபெற்று வந்தாலும் மீனவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதனிடையே காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தை எந்தவொரு அதிகாரியும் வந்து சந்திக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே மாயமான மீனவர்களை மீட்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் ராமன் துறையில் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் தலைமையில் தான் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டம் தொடங்கிய உடனே மாவட்ட ஆட்சியர் வந்து மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறும்போது, “ மாயமான மீனவர்களை தேடுவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக ஆட்சியர் தெரிவித்தார். இதுபோன்ற விபத்துகள் எங்களுக்கு புதிதல்ல. கடந்த 5 ஆண்டுகளில் இதுபோன்று 10-க்கும் மேற்பட்ட விபத்துகள் நடைபெற்றுள்ளன. அத்தனை விபத்துகளிலும் அடையாளம் தெரியாத கப்பல்கள் மோதி மீனவர்கள் இறந்துவிட்டார்கள் என வழக்குகள் முடிக்கப்படுகின்றன. அரசாங்கம் இதனை தொடர்ச்சியாகவே செய்து வருவதால் மாவட்ட ஆட்சித் தலைவரின் கருத்துகளை எங்களால் ஏற்க முடியவில்லை. இந்த மிகப் பெரிய படுகொலை செய்த கப்பலின் மாலுமியை உடனடியாக கைது செய்ய வேண்டும். இறந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மாயமான 9 மீனவர்களை போர்க்கால அடிப்படையில் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரையில் எங்களது உண்ணாவிரத போராட்டம் தொடரும்” என்றார்.
கடந்தாண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலின் தாக்கம் கடுமையாக இருந்தது. அப்போது மீன்பிடிக்கச் சென்ற ஏராளமான மீனவர்கள் கடலில் மாயமாகினர். தொடர்ச்சியாக மீனவர்களை மீட்கும் பணி நடைபெற்றாலும் அனைத்து மீனவர்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை. மீனவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு மட்டும் அப்போது வழங்கப்பட்டது. தற்போதும் கப்பல் மோதிய விபத்தில் மீனவர்கள் மாயமாகியுள்ளனர். இதனிடையே மீனவர்கள் கடலில் காணாமல் போகும் நேரத்தில் அவர்களை கண்டுபிடிக்க அரசு உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.