துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிக்க வந்த காவல்துறை அதிகாரிகளை ராமேஸ்வரம் மீனவர்கள் முற்றுகையிட்டனர்.
அதிகாரிகளுக்கு வழிவிடாமல் மீனவர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். துப்பாக்கிச்சூட்டை கண்டித்து மீனவர்கள் இன்று அடையாள வேலைநிறுத்தம் நடத்திவரும் நிலையில், அங்கு கடலோர காவல் குழும அதிகாரிகள் துறைமுக பகுதிக்கு வந்தனர். அவர்களை முற்றுகையிட்ட மீனவர்கள், இந்திய வீரர்களே தங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, நமது கடற்படையே துப்பாக்கிச்சூடு நடத்தி இருவரை காயப்படுத்தியிருப்பது தங்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாகியுள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர். நாளை கண்டன ஆர்ப்பாட்டத்தையும் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
இதனிடையே மீனவர்களின் இன்றைய வேலை நிறுத்தத்தால் 5 ஆயிரம் மீனவர்களும், மீன்பிடி சார்பு தொழிலாளர்கள் 70 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 கோடி ரூபாய் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது.