வங்கக்கடலில் நாளை மறுநாள் புயல் சின்னம் உருவாகவிருக்கும் நிலையில், தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..
வடகிழக்கு பருவமழைக் காலத்தின் முதல் புயல் வரும் 27ஆம் தேதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெறக்கூடும் என்றும், பின்னர், மேலும் வலுவடைந்து, புயலாக உருவாகும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. புயல் உருவாகும் பட்சத்தில் அதற்கு MONTHA என பெயரிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தசூழலில் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை மறுநாள் புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இதன்காரணமாக, தமிழக கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கவனமுடன் இருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் சின்னம் காரணத்தால், திருவள்ளூர், சென்னை, கடலூர், புதுச்சேரி, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, குமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க கடலோர காவல்படை அறிவுறுத்தியுள்ளது. ஆழ்கடல் மீன்பிடி பணியில் ஈடுபட்டுள்ள மீனவர்கள், உடனடியாக கரைக்கு திரும்பவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.