தமிழ்நாடு

3 வருடமாக ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு; பள்ளியிலும் நிராகரிப்பு- வேதனையில் மீனவக் குடும்பம் மனு

Sinekadhara

தரங்கம்பாடியில் 3 வருடமாக மீனவ குடும்பத்தினரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததால், பள்ளியிலும் மாணவர்கள் பாகுபாடு காட்டுவதாக மீனவ குடும்பத்தினர் கண்ணீர் மல்க ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் குட்டியாண்டியூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் காத்தவராயன். இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். அம்மனுவில் கூறியிருப்பதாவது, ‘’குட்டியாண்டியூரில் மீன் எடுத்து டிரான்ஸ்போர்ட் வேலை செய்து வருகிறேன். நாகை மாவட்டம் நம்பியார் நகர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு நான் ஒரு லட்சத்து 12 ஆயிரம் பணம் கொடுக்க வேண்டும் என்று கூறி, குட்டியாண்டியூர் ஊர் பஞ்சாயத்தார்கள் அழைத்து என்னிடம் பேசினர். அப்போது சுரேஷ் என்பவர்தான் எனக்கு பணம்கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தேன்.

அதற்கு பஞ்சாயத்தார் சொல்வதை நீ கேட்க வேண்டும்; அதை மீறினால் அபராதம் விதிப்பதோடு ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பதாக கூறினர். எனக்கு வரவேண்டிய பணத்தை கேட்டால் பஞ்சாயத்தில் நான் கொடுக்க வேண்டுமென்று கூறுகிறீர்களே? என்று கூறி ஒப்புகொள்ளாததால் என் குடும்பத்தை 3 ஆண்டுகளாக ஊரைவிட்டு ஒதுக்கிவைத்துவிட்டனர். இதனால் எனது இரண்டு மகன்கள், ஒரு மகள் பள்ளிக்குச் சென்றாலும் அருகில் யாரும் பேசாததால் மனவேதனை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பொறையார் காவல்நிலையத்தில் புகார் அளித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னை போன்று எங்கள் ஊரில் பல குடும்பங்களை பஞ்சாயத்தார் மிரட்டி வைத்துள்ளனர். சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பஞ்சாயத்து செய்து ஊரைவிட்டு விலக்கி வைத்துள்ளதால் எங்களது வாழ்வாதாரம் பாதித்து மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளோம். ஊரைவிட்டு ஒதுக்கிவைத்ததை விலக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லை என்றால் எங்கள் குடும்பத்தினரோடு தற்கொலை செய்துகொள்வதோடு வேறு வழி தெரியவில்லை’’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுமீது மாவட்ட ஆட்சியர் விரைந்து முடிவெடுப்பார் என்று நம்பப்படுகிறது.