‘மைக்ரோ ஃபைனான்சிங்’ முறையில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தோட்ட தொழிலாளர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் குமுளி, தேக்கடி, வண்டிப்பெரியார், கட்டப்பனை உள்ளிட்ட பகுதிகளில் தோட்ட தொழிலாளர்களிடம் 'மைக்ரோ ஃபைனான்சிங்' என்ற நூதன முறையில் 18,500 ரூபாய் செலுத்தினால் ஐந்து லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் என குமுளியை சேர்ந்த பெண்கள் இருவர் கூறியுள்ளனர்.
தமிழகத்தின் தேனியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஜே.எஸ்.பி.,என்ட்டர் ப்ரைஸஸ் என்ற நிதி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் என கூறிக்கொண்ட அந்தப் பெண்கள் இருவர், இந்த 'மைக்ரோ பைனான்சிங்' திட்டத்தில் பல பெண்களை உறுப்பினர்களாக சேர்த்துள்ளனர்.
இதில் பெண்கள் பலர் 18,500 ரூபாய் செலுத்தி தங்களை உறுப்பினர்களாக்கியுள்ளர். ஆனால் பல மாதங்களாகியும் ஏஜெண்டுகள் சொன்னஐந்து லட்சம் ரூபாய் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. சிலருக்கு முதல் தவணையாக 90 ஆயிரம் ரூபாயிலிருந்து இரண்டரை லட்சம் ரூபாய்கான தனியார் வங்கியின் காசோலைகளும் வழங்கப்பட்டுள்ளன.
காசோலைகளை வங்கியில் செலுத்தியபோது அந்த வங்கிக் கணக்கில் பணம் எதுவும் இல்லை எனத் தெரிந்தது. ஏஜெண்டுகள் எனக் கூறிய பெண்களிடம் கேட்டபோது, தங்களிடம் வாங்கிய தொகையை தேனி நிதி நிறுவனத்தில் செலுத்திவிட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து குமுளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் பலர் தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டதாக கூறி கேரள குமுளி போலீஸாரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து கேரள குமுளி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். புகாரில் உள்ளது போன்று தேனியில் இதுபோன்ற நிதி நிறுவனம் செயல்படுகிறதா எனக்கேட்டு தேனி மாவட்ட போலீஸாரிடம் உதவியை நாடியுள்ளனர் கேரள போலீஸார்.