தமிழகத்திலேயே முதன்முறையாக திருநங்கை ஒருவரை முதுகலை நாட்டுப்புறவியல் படிப்பில் 50 சதவிகித கட்டண சலுகையுடன் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சேர்த்துக் கொண்டுள்ளது.
திருநங்கைகளுக்கு முறையான அங்கீகாரம் இல்லாத நமது சமுதாயத்தில் இன்னும் கிடைக்கவில்லை. ஆகவே அவர்கள் வாழ்வில் நல்ல நிலையை அடைய வேண்டும் என்ற எண்ணத்திற்கு இது தடையாக உள்ளது. அதனை கடந்து, தனது கனவை நனவாக்கிட வேண்டும் என்ற லட்சியத்தோடு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுகலை நாட்டுப்புறவியல் பாடப்பிரிவில் சேர்ந்துள்ளார் திருநங்கை வர்ஷா. இவர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்தவர் ஆவார்.
மூன்றாம் பாலினத்தோரும் உயர்க்கல்வி பெற பல்கலைக்கழக மானியக்குழு ஏற்கெனவே வழிவகை செய்துள்ளது. இருப்பினும், பெற்றோரின் ஆதரவு இல்லாத ஒரே காரணத்தால், பல திருநங்கைகள் தங்களின் கனவை நோக்கி பயணிக்க முடிவதில்லை. வர்ஷாவின் வெற்றிப் பயணத்திற்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் ஒரு முக்கிய காரணம். வர்ஷாவை மாணவியாக சேர்த்துக் கொண்டது மட்டுமன்றி, அவரை ஊக்குவிக்கும் பொருட்டு கல்விக் கட்டணத்தில் 50 சதவிகித சலுகையும் வழங்கியுள்ளது. இதனால் வர்ஷா சொல்ல முடியாத அளவிற்கு மகிழ்ச்சியில் உள்ளார்.
தனக்குப் பிடித்த நாட்டுப்புறவியலை படிப்பது மட்டுமல்லாமல் திருநங்கைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் பாடுபடவுள்ளதாக கூறுகிறார்.