நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, அடுத்த ஆண்டு (2026) நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், ’ஜனநாயகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக இன்று கொடைக்கானல் செல்கிறார். அதற்காக அவர் மதுரை வழியாக செல்லவிருக்கிறார். இதையடுத்து, அவரை வரவேற்கும் வகையில், மதுரை விமான நிலையத்தில் காலை முதல் தவெக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இதற்கிடையே மதுரை செல்வதற்கு முன்பு, சென்னை விமான நிலையத்தில் முதன்முறையாக, விஜய் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மதுரை மக்களுக்கு வணக்கம். எல்லோருக்கும் என்னுடைய மே தின வாழ்த்துகள். ‘ஜனநாயகன்’ படவேலைக்காக கொடைக்கானல் செல்கிறேன். வேறு ஒரு சந்தர்ப்பத்தில் மதுரையில் உங்களைச் சந்திக்கிறேன். யாரும் வாகனங்களில் என்னைப் பின்தொடர வேண்டாம். நான் என் வேலையைப் பார்க்கப் போகிறேன். நீங்கள் வீட்டுக்குச் செல்லுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.