திமுக தலைவர் கருணாநிதியின் சாதனைகள் என்று ஒரு பட்டியல் போட்டால், அதில் ‘இந்து கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற சட்டம் நிச்சயம் இடம்பெறும். கருணாநிதியால் அன்று கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டத்திற்கு தற்போது உயிர் கிடைத்துள்ளது.
ஆம், முதன்முதலாக பிராமணரல்லாத ஒருவர் இந்து அறநிலையத்துறை கோயிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டு, 5 மாதங்களாக பணியாற்றி வருகிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதிக்கு அவரது நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது தெரியாமல் கூட இருக்கலாம். ஆனால், அது நடந்தேறிவிட்டது.
இந்தியாவிலேயே முதன்முறையாக பிராமணரல்லாத 36 பேரை இந்து கோயில்களில் அர்ச்சகராக நியமித்து கேரள அரசு புதிய தொடக்கத்தை உருவாக்கியது. இதற்கு உரிமை கொண்டாடி இருக்க வேண்டியது தமிழகம்தான். இருப்பினும், தற்போது மதுரையிலுள்ள கோயிலில் பிராமணரல்லாத ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை நகரைச் சேர்ந்த கணேசன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தான் 10 ஆண்டுகால காத்திருப்புக்குப் பின்னர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டு, தற்போது பணியாற்றி வருகிறார்.
கணேசனிடம் புதிய தலைமுறை இணையத்தளத்திற்காக பேசினோம். அவர் நமக்கு தந்த சிறப்பு பேட்டியில் பல விசயங்களை மனம் திறந்து பேசினார்.
நீங்கள் எப்படி நியமிக்கப்பட்டீர்கள்?
“மதுரைக் கோயில் ஒன்றில் அர்ச்சகர் பணியிடம் காலியாக இருப்பதாக கடந்த ஆண்டு(2017) அறிவிப்பு வெளியானது. அதற்கு விண்ணப்பித்தேன். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நேர்முகத் தேர்வு நடத்தினார்கள். அதன் பிறகு இந்துசமய அறநிலைத்துறை என்னை அர்ச்சகராக நியமித்தது. கடந்த பிப்ரவரி 26ம் தேதி பணியில் சேர்ந்தேன்”
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த உங்கள் நியமனம் எப்படி வெளியில் தெரியாமல் இருக்கிறது?
“எனக்கு தெரியவில்லை. தமிழக அரசு ஆணையின்படி பயிற்சி பெற்ற 206 பேரையும் மொத்தமாக நியமித்திருந்தால் வெளியில் தெரிந்திருக்கும். ஒருவர் மட்டும் என்பதால் தெரியவில்லையோ?”
இந்து அறநிலைய கோயிலில் பிராமணரல்லாத முதல் அர்ச்சகராக நீங்கள் நியமிக்கப்பட்டிருக்கிறீர்கள்? எப்படி இருக்கிறது?
“எனக்கு வித்தியாசமாக ஒன்றும் தோன்றவில்லை. 2008ம் ஆண்டு பயிற்சியை முடித்த பின்னர், கடந்த 10 ஆண்டுகளாக ஒரு கோயிலில் அர்ச்சகராக பணியாற்றி வந்தேன். அதன் தொடர்ச்சியாக இந்தக் கோயிலில் பணியாற்றுகிறேன். என்னுடைய பணியை நான் செய்கிறேன்.”
நீங்கள் எப்படி அர்ச்சகர் பணிக்கு வந்தீர்கள்?
“அர்ச்சகர் ஆவதற்கு முன்பு நான் புகைப்படக் கலைஞராக இருந்தேன். தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து அர்ச்சகர் ஆவதற்கான பயிற்சியை எடுத்துக் கொண்டேன். பயிற்சியின் போது எனக்கு எவ்வித சிரமமும் தெரியவில்லை. சுமார் ஒன்றை ஆண்டுகள் பயிற்சி எடுத்துக் கொண்டோம். பயிற்சியை முடித்து உடனடியாக ஒரு கோயிலில் அர்ச்சகர் பணியை தொடங்கினேன். தொடர்ந்து பணியாற்றி வருவதால், இந்தக் காத்திருப்பு எனக்கு பெரிதாக தெரியவில்லை.”
உங்களது வருமானம் எப்படி?
“இதற்கு முன்பு நான் பணியாற்றி வந்த கோயிலில் 6 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. தற்போது இந்து அறநிலைத்துறை மூலம் நியமிக்கப்பட்ட இந்த பணியில் பிடித்தம் போக ரூ.9000 கிடைக்கிறது.”
உங்கள் பேச்சில் நிறைய தயக்கம் தெரிகிறதே?
“ஆமாம். பணியில் சேர்ந்து 5 மாதங்கள் ஆகிவிட்டது. இதுநாள் வரையில் எவ்வித வித்தியாசத்தையும் உணரவில்லை. ஆனால், என்னை குறித்த செய்தி வெளியாகி விளம்பரம் ஆவது எனக்கு ஒருவித அச்சத்தை உருவாக்குகிறது. இன்று காலை முதல் என்னை அணுகி நிறைய பேர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.”
பிராணமல்லாதாவர் என்ற அடிப்படையில் எதேனும்.....?
“அப்படி எந்த அழுத்தமும் எனக்கு இதுநாள் வரை இல்லை. என்னுடைய பணியை நான் சுதந்திரமாக, மகிழ்ச்சியாக செய்ய விரும்புகிறேன். என்னுடைய பணியை செய்யும் போது நான் எதற்காகவும் யோசிக்க வேண்டியதில்லை.”