சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கிய 5 லட்சம் ரூபாய் நிவாரண தொகைக்கான காசோலையில் பணம் இல்லாததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் கடந்த பிப்ரவரி 12ம் தேதி ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் உயரிழந்தவர்களின் 25 குடும்பங்களுக்கு ஆலை நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதிக்கான காசோலையில் பணம் இல்லாததால் தொழிலாளர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுவரை 25 பேருக்கு காசோலை வழங்கப்பட்டுள்ள நிலையில், ஒருவருக்கு மட்டுமே பணம் கிடைத்துள்ளதாகவும் மற்ற 24பேரின் காசோலையில் பணம் இல்லாததால் அதிர்ச்சியடைந்துள்ளனர். நிவாரணம் வழங்குவதாக கூறி ஆலை நிர்வாகம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டியுள்ள உயிரிழந்த பட்டாசு தொழிலாளர்களின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் கண்ணனிடம் புகார் மனு அளித்துள்ளனர்,
அந்த புகார் மனுவில் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுத்து நிவாரண தொகையை பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளவர்கள், மத்திய அரசு அறிவித்த தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண தொகை ஒருவருக்கு கூட கிடைக்கவில்லை. அதேபோல மாநில அரசு அறிவித்துள்ள தலா 3 லட்சம் நிவாரண தொகை இதுவரை 17 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
விபத்தில் பாதிக்கப்பட்ட 27 குடும்பத்தினரும் குடும்ப தலைவர்களை இழந்து நிற்கதியாக உள்ள நிலையில் வாழ்வாதரத்திற்கு உதவி செய்யும் வகையில் அனைவருக்கும் முறையாக நிவாரண உதவித்தொகையை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து ஆட்சியர் கன்னணினிடம் கேட்டபோது உரிய விசாரணை நடத்தி நிவாரண தொகை முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.