விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளம் பட்டாசு ஆலை விபத்தில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இன்று, சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடிவிபத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர் 13 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள காளையார் குறிச்சியில், தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான தங்கராஜ் பட்டாசு ஆலையில் பேன்சி ரக பட்டாசு தயாரிக்கும்போது விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 10 அறைகள் தரைமட்டமாகியுள்ளன. இந்த விபத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். 13 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இறந்த 5 பேர் யார் என்று அடையாளம் தெரியவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 13 பேரில் 3 பேர் 80 சதவீத தீக்காயங்களுடன் உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை உயர வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. மீட்புப் பணியில் 40 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். விதிமீறல்கள் ஏதும் இருக்கிறதா என வருவாய்த் துறையினரும் காவல் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.