சுற்றுச்சூழல் விதிகளிலிருந்து பட்டாசுக்கு விலக்களிக்கக் கோரி சிவகாசியில் 12ஆவது நாளாக பட்டாசு உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் வேலைநிறுத்தம் காரணமாக 165 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் மாசு குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனால், பட்டாசுக்கு தடைவிதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் வியாபாரிகள் ஆர்டர்களை குறைத்துவிட்டனர். இதன் காரணமாக சிவகாசியில் 12ஆவது நாளாக பட்டாசு உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் காரணமாக 4 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பட்டாசு உற்பதியாளர்கள் சங்கத்தினர் அடுத்தகட்ட போராட்டம் குறித்து இன்று அறிவிக்க உள்ளதாக தெரிகிறது.
இதனிடையே தீபாவளி மற்றும் தசரா உள்ளிட்ட பண்டிகை நாட்களில் வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் பெரிய அளவு மாசு ஏதும் ஏற்படவில்லை என உச்சநீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.