மாதவரம் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ இன்று இரவுக்குள் முழுமையாக அணைக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாதவரம் ரவுண்டானா பகுதியில் உள்ள ரசாயனக் கிடங்கில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் விரைந்துள்ள 50க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இப்போது ஸ்கைலிப்ட் இயந்திரத்தைக் கொண்டு தீயை அணைக்கும் பணி தொடங்கியுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி " இன்று இரவுக்குள் தீ முழுமையாக அணைக்கப்படும். தீ விபத்தால் அருகே உள்ள மக்களுக்கு எந்த தீ காயம் பாதிப்பும் இல்லை. அனைவரும் பாதுகாப்பாக வெளியேறிவிட்டனர். கிடங்கின் உரிமையாளர் துறைமுகத்தில் இருந்து வரும் ரசாயனப் பொருட்களை சுங்க வரி செலுத்தி கொண்டு வந்துள்ளார். வரி செலுத்தும் விகிதப்படி இங்கிருந்து ரசாயன பேரல்கள் எடுத்துச் செல்லப்பட்டு வந்தன. மருந்து தயாரிப்பதற்கான ரயசாயனங்கள் மட்டுமே உள்ளே இருந்ததா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. முழுவிவரம் பின்புதான் தெரிய வரும்" என்றார் அவர்.