நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தந்தை, மகனை போராடி மீட்ட தீணைப்பு வீரர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருமூர்த்தி என்பவரும் அவரது 9 வயது மகனும் பட்லூர் காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது, ஆற்றின் வேகத்தில் இருவரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தீயணைப்பு வீரர் மோகன், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத போதும் ஆற்றில் குதித்து தந்தையும், மகனையும் மீட்கப் போராடினார்.
அதற்குள் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனத்தோடு வந்த வீரர்கள் நீண்ட போராட்டத்திற்கு பின், திருமூர்த்தியையும், அவரது மகனையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மூச்சு, பேச்சின்றி கிடந்த சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த தீயணைப்புத்துறையினர், அவர்களது மீட்பு வாகனத்திலேயே கொண்டு சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்தச் சம்பவம் அங்கு கூடியிருந்த மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.