தமிழ்நாடு

'கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டி!' - சிவகார்த்திகேயன் படம் போல நடந்த மீட்புப் பணி

Sinekadhara

தாரமங்கலம் அருகேயுள்ள பவளதானூர் விவசாயக் கிணற்றில் விழுந்த பசுமாட்டு கன்றுக்குட்டியை ஓமலூர் தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர். வீரர்களுக்கு கிராம மக்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுக்காவில் உள்ள தாரமங்கலம் ஒன்றியத்தில் பவளத்தானூர் கிராமம் உள்ளது. இந்தப் பகுதியில் தேவேந்திரன் என்ற விவசாயி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழில் செய்துவருகிறார். இவர் வளர்த்து வந்த பசுமாடு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆண் குட்டியை ஈன்றுள்ளது.

இந்த கறவை பசு மாட்டை கன்றுக்குட்டியுடன் அவரது விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது பசு மாட்டுடன் வயலில் துள்ளி குதித்து விளையாடிக் கொண்டிருந்த காளை கன்றுக்குட்டி, அருகிலிருந்த விவசாயக் கிணற்றில் நிலை தடுமாறி விழுந்தது. கன்றுக்குட்டி கிணற்றில் விழுந்ததை அறிந்த பசுமாடு அங்குமிங்கும் அலைந்தபடி சத்தம்போட்டு கத்தியுள்ளது.

இதைப்பார்த்த விவசாயி தேவேந்திரன் மாட்டின் அருகே வந்து, கன்றுக்குட்டியை அங்குமிங்கும் தேடியுள்ளார். ஆனால், காளை கன்று கிடைக்காததால், அருகில் இருந்த கிணற்றை எட்டி பார்த்துள்ளார். அப்போது கன்றுகுட்டி சுமார் 140 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து தண்ணீரில் உயிருக்காக போராடி கொண்டிருந்தது. இதையடுத்து அவர் ஓமலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள், கயிறுகளைக் கட்டி கிணற்றில் இறங்கினர். பின்னர் கிணற்றில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கன்றுக்கட்டியை, பொதுமக்கள் உதவியுடன் மேலே இழுத்து உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

சுமார் 140 அடி ஆழமுள்ள கிணற்றில் உயிருக்குப் போராடிய கன்றுக்குட்டியை பாதுகாப்பாக உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு மாட்டின் உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்து பாராட்டினர்.