சென்னை தியாகராய நகர் ரெங்கநாதன் தெருவில் உள்ள அஸ்தி டவரில் தீ விபத்து ஏற்பட்டது.
தி.நகரின் அடையாளங்களில் ஒன்று ரெங்கநாதன் தெரு. இங்கு பிரபலமான ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் உள்பட பல்வேறு கடைகள் உள்ளதால் பொருட்கள் வாங்க இங்கு மக்கள் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். தீபாவளி பண்டிகையை ஒட்டி இங்கு வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
இந்நிலையில் இந்தத் தெருவில் உள்ள அஸ்தி டவரில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. 3 அடுக்கு கட்டடமான இதன் மூன்றாவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த கட்டடத்தில் ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல் கடை ஊழியர்களுக்கான உணவு, அதிகாலையில் சமைக்கப்பட்டிருக்கிறது. அப்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தியாகராய நகர், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை ஆகிய மூன்று இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வந்தன. சுமார் 20 நிமிடத்தில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இதில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக அத்தெருவில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.