தமிழ்நாடு

தேனி அருகே எண்ணெய் ஆலையில் பயங்கர தீவிபத்து!

webteam

தேனி அருகே தனியார் எண்ணெய் ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் தீயில் கருகி நாசமாகின

தேனி அருகே அன்னஞ்சி விலக்கில் தனியாருக்குச் சொந்தமான எண்ணெய் ஆலை உள்ளது. இங்கு நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பணியாளர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென பற்றியதால் பணியிலிருந்த 12 தொழிலாளர்களும் தப்பியோடினர். அப்போது இரண்டு தொழிலாளர்கள் தீயில் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினரும், தீயணைப்புத்துறையினரும் இரண்டு தொழிலாளர்களையும் மீட்டனர். 

ஆலை முழுவதும் தீ பரவியதால் அதில் சிக்கி எண்ணெய் பாய்லர்களும் டிரம்களும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனால் அந்த இடம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. அசம்பாவிதங்களை தடுக்க ஆலையை சுற்றிய இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப் பட்டது. 

தேனி, பெரியகுளம், போடி, ஆண்டிப்பட்டி, திண்டுக்கல் ஆகிய இடங்களில் இருந்து வந்த தீயணைப்புத்துறையினர் போராடி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் பாய்லர்கள் தொடர்ந்து வெடித்துச் சிதறியதால் ஆலை அருகே பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.