மதுரை விளக்குதூண் பகுதியிலுள்ள ஜவுளிக்கடையில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.
மதுரை விளக்குதூண் பகுதியிலுள்ள ஜவுளிக்கடையில் அதிகாலை 4 மணியளவில் தீப்பற்றியது. இதுகுறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. பெரியார் நிலையம், அனுப்பானடி, தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 10க்கும் அதிகமான தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. ஜவுளிக்கடை குறுகிய சந்தில் இருந்ததால் வாகனங்கள் அருகில் செல்ல முடியாமல் தொலைவிலிருந்தே தீயை அணைக்க நேரிட்டது. அதனால் ஏற்பட்ட காலதாமதத்தில் ஜவுளிக்கடை முழுவதும் எரிந்து நாசமாகியது. அருகிலுள்ள கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர்.
கட்டடம் இடிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து கட்டடத்தை குளிர்விக்கும் பணி நடைபெற்று வருகிறது. 5 மணி நேர முயற்சிக்குப் பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. தீ விபத்து குறித்து மதுரை தெற்குவாசல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.