fire service pt desk
தமிழ்நாடு

ஜெயங்கொண்டம்: ஸ்டேட் பேங்கில் தீடீரென ஏற்பட்ட தீ விபத்து - மின்கசிவு காரணமா? போலீசார் விசாரணை!

ஜெயங்கொண்டம் ஸ்டேட் வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. மின்கசிவு காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Kaleel Rahman

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் பாரத ஸ்டேட் பேங்க்கின் கிளையொன்று இயங்கி வருகிறது. இந்த வங்கியில் சுமார் 1 லட்சத்திற்கும் மேலான வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்துள்ளனர். இங்கு நேற்று வழக்கம் போல் இரவு நேர காவலர் சந்திரசேகரன் என்பவர் வங்கியை பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். இதையடுத்து இரவு 8:30 மணியளவில் அலாரம் சத்தம் கேட்பதாக பக்கத்தில் உள்ளவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

fire accident

இதையடுத்து அங்கு சென்ற இரவு நேர காவலர், வங்கியை திறந்து பார்த்துள்ளார். அப்போது புகைமூட்டமாக இருந்ததால், ஜெயங்கொண்டம் தீயணைப்புத் துறையினருக்கு அவரும் அங்கிருந்தவர்களும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அலுவலர் அம்பிகா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீ விபத்தை உறுதிசெய்தபின், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி அவர்கள் தீயை அணைத்தனர்.

இது குறித்து வங்கி மேலாளர் நீரஜ் திவாரி மற்றும் அரியலூர் வங்கி மேலாளர் கோபி ஆகியோர் கூறுகையில், “ஒவ்வொரு நாளும் ஜெயங்கொண்டம் ஸ்டேட் பேங்கில் நடைபெறும் அனைத்து கணக்குகளும் சரிபார்க்கப்பட்டு மாலை 4 முதல் 5 மணிக்குள்ளாக பணம், நகை மற்றும் பத்திரங்கள் ஆகியவை அரியலூர் வங்கிக்கு கொண்டு செல்லப்படும். ஆகையால் வாடிக்கையாளர்கள் யாரும் அச்சப்பட தேவை இல்லை.

Fire accident

இந்த தீ விபத்தில் ஃபர்னிச்சர், கம்ப்யூட்டர், பேட்டரி, ஏசி உள்ளிட்டவை மட்டுமே எரிந்திருக்க கூடும். அவை அனைத்திற்கும் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. ஆகையால் நாளை வங்கி வழக்கம் போல் செயல்படும்” என கூறினார்கள். இந்நிலையில் இந்த விபத்து குறித்து காவல்துறை விசாரணை செய்துவருகிறது. மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.