தமிழ்நாடு

பெண் எஸ்.பி தொடுத்த பாலியல்புகார்: சிபிஐக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை- சென்னை நீதிமன்றம்

பெண் எஸ்.பி தொடுத்த பாலியல்புகார்: சிபிஐக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை- சென்னை நீதிமன்றம்

webteam

பெண் எஸ்.பி கொடுத்த பாலியல் புகார் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐ க்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

காவல் உயரதிகாரி ஒருவர் மீது பெண் எஸ்.பி கொடுத்த பாலியல் புகார் தொடர்பான வழக்கு விசாரணையை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கண்காணித்து வருகிறார். இந்த வழக்கை சிபிஐ க்கு மாற்ற வேண்டும் என ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ராஜேந்திரன் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் விசாரணையை தனி நீதிபதி கண்காணித்து வருவதால் சிபிஐக்கு மாற்ற தேவையில்லை” எனத் தெரிவித்தது. 

முன்னதாக, பெரம்பலூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பரப்புரையின் போது பாதுகாப்பு பணியில் இருந்த பெண் எஸ்.பி. ஒருவருக்கு, டிஜிபி அந்தஸ்திலான காவல்துறை அதிகாரி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. பெண் எஸ்.பி. அளித்த புகார் மீது சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட விசாகா கமிட்டியும் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரம் குறித்து தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றமும் விசாரணை நடத்தி வருகிறது. புகார் அளிக்க சென்ற பெண் எஸ்.பி.யை தடுத்த புகாரில் மாவட்ட எஸ்.பி. மட்டும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், டிஜிபி அந்தஸ்திலான அதிகாரியை ஏன் இன்னும் பணியிடை நீக்கம் செய்யவில்லை? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

அதனைத்தொடர்ந்து சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் சிபிசிஐடி காவல்துறையினர் முதற்கட்டமாக 4 மணி நேரம் நேரில் தீவிர விசாரணை நடத்தினர். இதனை அடுத்து புகாரில் சிக்கிய உயரதிகாரியை தேர்தல் ஆணையம் பரிந்துரையின் அடிப்படையில் தமிழக அரசு பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தது. எனினும் அவர் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெறும் என சிபிசிஐடி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.