தமிழ்நாடு

தனியார் மருத்துவமனைக்கு ரூ.5 லட்சம் அபராதம்: கொசு உற்பத்திக்குக் காரணமாக இருந்ததால் நடவடிக்கை

தனியார் மருத்துவமனைக்கு ரூ.5 லட்சம் அபராதம்: கொசு உற்பத்திக்குக் காரணமாக இருந்ததால் நடவடிக்கை

rajakannan

மதுரையில் சுகாதாரமற்ற நிலையில், கொசு உற்பத்தியாகக் காரணமாக இருந்த தனியார் மருத்துவமனைக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 

டெங்குவை ஒழிக்க தீவிர‌‌‌ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மாநகராட்சி ஆணையர் அனீஸ் சேகர் இன்று தபால் தந்தி நகர்ப் பகுதியில் உள்ள வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அப்பகுதியிலிருந்த தனியார் மருத்துவமனையை ஆய்வு செய்த ஆணையர், சுகாதாரமற்ற நிலையில் மருத்துவக் கழிவுகள் இருப்பதையும், தொட்டிகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் கொசுப்புழுக்கள் இருப்பதையும் கண்டுபிடித்து, ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார்.

அதேபோல், திருவாரூரில் டெங்கு கொசுவை உற்பத்தி செய்ததாக கூறி பேரூராட்சி அலுவலகத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் ஆய்வு மேற்கொண்டபோது, சுகாதாரமற்ற நிலையில் இருப்பதைக் கண்டு அபராதம் விதித்து உத்தரவிட்டார். தேவர்கண்டநல்லூர் பகுதியில் வீதி வீதியாக ஆய்வு பணியில் ஈடுபட்ட அவர், ஓஎன்ஜிசி நிறுவனத்திலும் சுகாதார பணிகள் குறித்த ஆய்வில் ஈடுபட்டார். வெங்காரப்பேரையூர் பகுதியில் ஓய்வுபெற்ற காவலர் வீட்டில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரம் இல்லாமல் இருந்ததாக கூறி அவருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து ஆட்சியர் உத்தரவிட்டார். திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை டெங்கு ஒழிப்பு பணியின்போது 3 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.