தற்கொலை செய்து கொண்ட சென்னை கவின் கலைக் கல்லூரி மாணவர் பிரகாஷின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தற்கொலைக்கு முன் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ள பிரகாஷ், துறைத் தலைவர் ரவிக்குமார் தமக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்ததாக தெரிவித்துள்ளார். ரவிக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய பெற்றோர், பிரகாஷின் உடலை வாங்க மறுப்பு தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கல்லூரி நிர்வாகத்தினர் உறுதியளித்ததை அடுத்து, பிரகாஷின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.
வேலூர் அடுக்கம்பாறை பகுதியை சேர்ந்த பிரகாஷ். இவர் ஓவியம் மற்றும் சிலை செய்வதின் மீது கொண்ட ஆர்வத்தால் சென்னை கவின் கலை கல்லூரியில் 4 ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது துறைத் தலைவர் தனக்கு மன ரீதியான அழுத்தம் கொடுத்ததாகவும், தான் கனவாக எண்ணி வடிவமைத்து வந்த சிலையை செய்ய விடாமல் தடுத்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வதாகவும் கடிதம் எழுதி வைத்து விட்டு பிரகாஷ் தற்கொலை செய்து கொண்டார். நண்பர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் வீடியோ ஒன்றையும் அவர் அனுப்பியிருந்தார்.
இன்று அவரது உடல் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அந்த உடலை வாங்க அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும், நண்பர்கள் உடலை வாங்க மறுத்து வந்தனர். கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என அவர்கள் கூறி வந்தனர். பின்னர் கல்லூரி நிர்வாகம் ஒரு வார காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து உடலை பெற்றுக்கொண்டனர்.
பிரகாஷின் கனவே மிக சிறந்த சிலை வடிவமைப்பாளர் ஆக வேண்டும் என்பதுதான். ஆனால் அவரது ஆசையை கல்லூரி நிர்வாகம் அழித்துவிட்டதாக பிரகாஷின் அண்ணண் பிரதாப் கூறினார். கல்லூரி நிர்வாகம் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.