தமிழ்நாடு

தமிழக அரசின் நிதிநிலை - ஆகஸ்ட் 9ஆம் தேதி வெள்ளையறிக்கை வெளியீடு

Sinekadhara

தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளையறிக்கையை வரும் 9-ஆம் தேதி வெளியிடுகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் அடங்கிய ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் வருகிற 13-ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவது குறித்தும் முடிவெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக அரசின் நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வருகிற 9-ஆம் தேதி வெளியிடுகிறார்.

120 பக்கம்கொண்ட இந்த வெள்ளை அறிக்கையில் கடந்த 10 ஆண்டுகளில் வரவு செலவுகள் எவ்வாறு இருக்கிறது, எந்தெந்த துறைகளில் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது, மாநிலத்தின் கடன்நிலை மற்றும் அதற்கான காரணங்கள் என்னென்ன, குறிப்பாக குடிநீர் சார்ந்த திட்டங்களின் செலவு என்ன, போக்குவரத்து மற்றும் மின்சார வாரியத்தில் கடன் அதிகரித்திருக்கும் காரணம் என்ன, உள்ளாட்சி நிறுவனங்களின் கடன் குறித்த விவரங்கள் இதில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய தேவையில்லை என்றும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக பட்ஜெட் மற்றும் வெள்ளை அறிக்கை தாக்கல் தேதிகளை முடிவு செய்யவே இன்று கூட்டம் நடைபெற்றதாகக் கூறப்பட்டுள்ளது.