தமிழ்நாடு

’தமிழ் சமூகத்தின் சாபக்கேடு’ ‘என் காலனிகளுக்கு கூட’-பிடிஆர் Vs அண்ணாமலை ட்விட்டர் யுத்தம்!

webteam

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போன்றோர் தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடு என நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, டிவிட்டரில், அந்த ஆட்டின்(சிம்பிள்) பெயரை கூட தான் குறிப்பிட விரும்பவில்லை என பதிவிட்டுள்ளார். தியாகியின் உடலை வைத்து விளம்பரம் தேடுவது, தேசிய கொடி பொருத்தப்பட்டுள்ள கார் மீது காலனி வீச ஏற்பாடு செய்வது, அவதூறு பரப்புவது, அப்பட்டமாக பொய் பேசுவது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடும் நபர் தமிழ்ச்சமூகத்தின் சாபக்கேடு என குறிப்பிட்டுள்ளார். அந்த சாபம் பாஜக மீதும் உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த பதிவின் கீழ் அண்ணாமலை தொடர்புடைய சில செய்தித்தாள் படங்களையும் அமைச்சர் இணைத்திருந்தார்.

இதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் ட்விட்டரில் காட்டமாக பதில் அளித்துள்ளார். பெரிய பரம்பரையில் பிறந்தவர்கள் என்பதை தவிர வேறு என்ன பயனுள்ளதை செய்துள்ளீர்கள் என அமைச்சருக்கு கேள்வி எழுப்பியுள்ளார். முன்னோர்களின் முதலெழுத்துக்களுடன் மட்டுமே வாழுபவர்களுக்கு, ஒரு விவசாயியின் மகன் வளர்வதை ஏற்று கொள்ள முடியாதுதான் எனவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். அரசியலுக்கும், மாநிலத்திற்கும் சாபக்கேடானவர்கள், என் காலனிகளுக்கு கூட நிகரில்லை என்று அண்ணாமலை மிகவும் காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

நடந்தது என்ன?

மதுரையில் கடந்த 13ஆம் தேதி மதுரை விமான நிலையத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய விவகாரம் நடைபெற்றபோது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மதுரை புறநகர் மாவட்ட தலைவர் சுசீந்திரன் ஆகிய இருவரும் தொலைபேசியில் பேசியதாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலை மற்றும் மகா சுசீந்திரன் பேசுவது போன்ற ஆடியோவை மிமிக்ரி செய்து வெளியிட்டதாக கூறி இருவருக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் டாக்டர் சரவணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நடந்து கொண்டுள்ளதாகவும் எனவே டாக்டர் சரவணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீதும் இந்த ஆடியோ பதிவை சமூக வலைத்தளங்களில் பரப்பியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்தில் பாஜக மாவட்ட தலைவர் சுசீந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் புகார் மனு அளித்துள்ளனர்.

மேலும் மாவட்ட தலைவர் சுசீந்திரன் கொடுத்துள்ள இந்த மனுவில், “நானும் மாநில தலைவர் அண்ணாமலையும் ஒரே காரில் சென்று கொண்டிருந்த போது டாக்டர் சரவணன் அண்ணாமலையின் உதவியாளருக்கு போனில் அழைத்து அண்ணாமலையிடம் பேசினார். அப்போது அஞ்சலி செலுத்த நிதி அமைச்சர் அனுமதி மறுப்பதாக கூறியதாகவும் அதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் உண்மை தன்மையை மக்களிடம் எடுத்து கூறி பொய்யான முத்திரையை காட்டி வேற லெவல் அரசியல் செய்வோம் என டாக்டர் சரவணனிடம் கூறினார். இதனை தொடர்ந்து விமான நிலையத்தில் நானும் பாஜக தலைவர் அண்ணாமலையும் ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு சிவகங்கைக்கு அவரை அனுப்பி விட்டோம். எனவே சம்பவம் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. அண்ணாமலையுடன் நான் எந்த இடத்திலும் போனில் பேசவில்லை. மேற்படி உரையாடலை டாக்டர் சரவணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அவதூறு பரப்பும் வகையில் கட்டிங் எடிட்டிங், மெமிக்கிரி செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி மக்கள் மத்தியில் குழப்பத்தையும் கலவரத்தையும் ஏற்படுத்தி வருகின்றனர். பாஜக மாநில தலைவர் உதவியாளர், டாக்டர் சரவணன், மற்றும் எனது செல்போன் எண்களை முழுமையாக ஆய்வு செய்து டாக்டர் சரவணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.