சென்னையில் ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் மாதம் 15 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாகக் கூறி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக ஹிஜாவு என்ற நிதி நிறுவனம் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சவுந்தரராஜன் என்பவர், மகன் அலெக்சாண்டருடன் இணைந்து சென்னையில் ஹிஜாவு என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 15 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாகக் கூறி, கடந்த நான்கு ஆண்டுகளாக சுமார் ஒரு லட்சம் பேரிடம் இந்நிறுவனம் பணம் வசூல் செய்துள்ளது. துபாய் உள்ளிட்ட நாடுகளில் எண்ணெய் கிணறுகள் வைத்திருப்பதாகவும் அதில் முதலீடு செய்து கிடைக்கும் லாபத்தில் அதிக வட்டி தருவதாகவும் இந்நிறுவனம் கூறியுள்ளது. இந்த நிறுவனத்தில் ஆட்கள் சேர்ப்பவர்களுக்கு மாதாமாதம் கமிஷன் வழங்கப்படும் எனக் கூறப்பட்டதால் பலர் முகவராகவும் இணைந்து ஆட்களை சேர்த்துள்ளனர்.
இந்நிலையில், உறுதி அளித்தபடி வட்டி தொகை வழங்காமல் ஹிஜாவு நிறுவனம் ஏமாற்றியதால், நூற்றுக்கணக்கான முதலீட்டாளர்கள் அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான முதலீட்டாளர்கள் திரண்டு, முகவர்களாக செயல்பட்டவர்களிடம் வாக்குவாதம் செய்ததால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து காவல்துறையினர் அவர்களிடம் புகார்களை பெற்று சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
அதிக வட்டி தருவதாக கூறுபவர்களிடம் பணத்தை இழக்க வேண்டாம் என ரிசர்வ் வங்கி தொடர்ந்து விளம்பரம் செய்துவரும் நிலையில் மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டியுள்ளது.